தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், போட்டான் கதாஸ் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநராக 2011ம் ஆண்டு பதவி வகித்தார். ஆறு மாதங்களுக்கு பின் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இந்நிலையில், போட்டான் கதாஸ் நிறுவனம், 2013-14ம் ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உதவி ஆணையர் புகாரும் அளித்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக கௌதம் மேனனும் சேர்க்கப்பட்டிருந்தார். வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, எழும்பூர் நீதிமன்றம், அவருக்கு சம்மனும் அனுப்பியிருந்தது. அதில் ஒவ்வொரு முறையும் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவை ஏற்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தொடர்ந்துள்ள வழக்கில், போட்டோன் கதாஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரியிருந்தார்.
அந்த மனுவில், தனக்கும், போட்டான் கதாஸ் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனக்கெதிரான இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனனுக்கு விலக்களித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.