மெரினா கடற்கரை பகுதியில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பின்பற்றும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், போராட்டத்துக்காக மெரினாவில் ஒன்று கூடும்படி துண்டறிக்கை மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.
மெரினாவில் போராட்டங்களை நடத்த அனுமதிக்க கூடாது என மனுவில் கோரியிருந்தார். இம்மனு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெரினாவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை என கூறினார்.
இதனை ஏற்ற நீதிபதிகள், மெரினா கடற்கரை பகுதியில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த அனுமதியில்லை என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பின்பற்றுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், போராட்டம் தொடர்பான போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என கூறி, இம்மனுவை தள்ளுபடியும் செய்தனர்.