ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு அவரது அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மனுதாரர் புகழேந்தியிடம், நிர்வகிக்க கோரும் ஜெயலலிதாவின் சொத்துகள் எவை என கேள்வி எழுப்பினர்.
கடந்த 1996-ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துகளையா? அல்லது 2016ம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள அவரது அனைத்து சொத்துகளையுமா என விளக்கம் கேட்டனர். மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட சொத்துக்கள் பட்டிலையும், 2016ம் ஆண்டு தேர்தலின்போது வேட்புமனுவில் தமது சொத்துகள் என ஜெயலலிதாவால் குறிப்பிடப்பட்ட பட்டியலையும் வரும் ஜனவரி 2ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரர் புகழேந்தி, ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சொத்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டால், வருமானவரித்துறையை வழக்கில் சேர்க்கவும் தயாராக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.