கஜா புயல் சேதத்தை ஆய்வு செய்த மத்தியக்குழு 2 நாள்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு மண்ணாக முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிப்புடன் நிற்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் கஜா புயல் சரி செய்ய தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது எனவும் புயல் பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் செய்தது குறித்து மின்வாரியம் அறிக்கை அளிக்கவும் தேவையான அளவு நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை மாநில அரசிற்கு பிறப்பித்தனர்.
இதனைத்தொடர்ந்து புயல் சேதத்தை ஆய்வு செய்த மத்தியக்குழு 2 நாள்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. மேலும் மத்திய அரசின் நிபுணர் குழு ஆலோசித்து தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் இடைக்கால அறிக்கையைத் அடிப்படையில் மத்திய அரசு உரிய எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து டிச.6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.