தமிழ்நாடு

சின்னத்தம்பியை பிடிக்க நீதிமன்றம் அனுமதி - துன்புறுத்தக் கூடாது..!

சின்னத்தம்பியை பிடிக்க நீதிமன்றம் அனுமதி - துன்புறுத்தக் கூடாது..!

webteam

சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்தம்பியை கும்கியாக யானையாக மாற்றாமல், மீண்டும் வனத்துறைக்கு அனுப்ப வேண்டும் என முரளிதரன், அருண் பிரசன்னா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதற்கிடையே சின்னத்தம்பியை பிடிக்க அனுமதி வழங்குமாறு வனத்துறை கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், சின்னத்தம்பியை பிடிக்க வனத்துறைக்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 

அத்துடன், சின்னத்தம்பியை பிடிக்கும்போது காயப்படுத்தவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது எனவும் அறிவுறுத்தியது. அத்துடன் நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, உடனே அதனை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லலாம் எனக்கூறியது. அத்துடன் சின்னத்தம்பியை முகாமில் வைப்பதா அல்லது நிரந்தரமாக காட்டுக்குள் கொண்டு சென்றுவிடலாமா? என்பதை வனத்துறை தலைமை பாதுகாவலர் முடிவுசெய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கண்ணாடி புத்தூரில் கடந்த 4 நாட்களாக சின்னத்தம்பி யானை முகாமிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதனுடைய நடத்தை வேகத்தோடு காணப்பட்டது. மேலும், அங்கிருந்த குடிநீர் குழாயை உடைத்து தென்னை மரங்களை முட்டி மோதியும் வழக்கத்துக்கு மாறாக காணப்பட்டது. இதனால் சின்னத்தம்பி யானையின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கூறி சின்னத்தம்பி அருகில் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கரும்புத் தோட்டத்தில் இருந்து வாழைத்தோட்ட பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானையானது, அங்கிருந்து பயிர்களை மூடி வைக்கப் பயன்படும் சாக்குப்பையை எடுத்து விளையாட தொடங்கியது. அதனை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். அத்துடன் சின்னத்தம்பியின் விளையாட்டை கண்ட பொதுமக்கள் கைகளை நீட்டி ஆரவாரம் செய்ததோடு உற்சாகக் குரல் எழுப்பினார்கள். பதிலுக்கு சின்னத்தம்பியும் உற்சாக குரல் எழுப்பியது.