தமிழ்நாடு

‘மேகாலயாவும் இந்தியாவின் ஒரு பகுதிதான்’- நீதிபதி தஹில் ராஜினாமா குறித்து சந்துரு கருத்து

‘மேகாலயாவும் இந்தியாவின் ஒரு பகுதிதான்’- நீதிபதி தஹில் ராஜினாமா குறித்து சந்துரு கருத்து

webteam

உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வதற்கு முன் மாநில அரசிடம் கருத்து கேட்பது அவசியம் என ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் இடமாற்றம், நியமனம் குறித்து முடிவெடுக்கும் கொலிஜியம், மற்ற நீதிபதிகள் இடமாற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகளிடம் கருத்துக் கேட்க வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இடமாற்றம் வேண்டாம் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தனது பதவியை தஹில் ரமாணி ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பொதுவாக நீதிபதிகள் இடமாற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகளிடம் கொலிஜியம் கருத்து கேட்பதில்லை என்றும், தலைமை நீதிபதி என்றால் மாநில அரசின் கருத்தைக் கேட்பது வழக்கம் என்றும் கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் புதிதாக அமைக்கப்படும் உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில நீதிபதிகள் பணிமூப்பு இல்லாத காரணத்தால் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதில் சிக்கல் உள்ளதாகவும், எனவே, மூத்த நீதிபதிகளை அங்கு அனுப்ப நேரிடுவதாகவும் சந்துரு தெரிவித்தார்.

தஹில் ரமாணி விவகாரம் குறித்து தி இந்து நாளிதழுக்கு பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ''இன்று, நாடு முழுவதும் 25 க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்றங்கள் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களும் தனித்தனி நீதிமன்றங்களைக் கொண்டுள்ளன. அவை சிறியவை. கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு விதிமுறையாகிவிட்டால், “நான் ஒரு வடகிழக்கு மாநிலத்திற்கு செல்லமாட்டேன்” என்று யாரும் சொல்ல முடியாது. மேகாலயாவும் இந்தியாவின் ஒரு பகுதியாகும், அதுவும் ஒரு மாநிலம் தான். உங்கள் நிலை, ஊதியம், சம்பளம், சலுகைகள் மற்றும் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாகக் கொண்டிருப்பதால், மேகாலயாவுக்கு மாற்றப்படுவதை ஒருவர் ஏன் எதிர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை'' என தெரிவித்துள்ளார்.