என்கவுன்ட்டர்கள் முகநூல்
தமிழ்நாடு

“ஆங்கிலேய ஆட்சியை நினைவுக்கு கொண்டுவரும் என்கவுன்ட்டர்கள்” - கடுமையாக சாடிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

காவல்துறையின் என்கவுன்டர் சம்பவங்கள் ஆங்கிலேய ஆட்சியை நினைவுக்கு கொண்டுவரும் என்றும், இது ஒரு பிற்போக்கு சிந்தனை என உணராமல் சிலர் பாராட்டத் தொடங்கிவிடுவதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையாக சாடியுள்ளது.

PT WEB

மதுரையைச் சேர்ந்த குருவம்மாள், 2010ஆம் ஆண்டு தனது மகன் முருகன் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரனை நேற்று நடந்தபோது, நீதிபதி பரத சக்கரவர்த்தி “தற்போது குற்றவாளிகள் காவலர்களை தாக்க முயல்வதும், அதன்பிறகு அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், சிலர் கை, கால்களை உடைத்துக் கொள்வதும் வழக்கமாகி வருகிறது” என குறிப்பிட்டார்.

மேலும், “என்கவுண்டர் மரணங்கள் அடிப்படையிலேயே தவறானவை என்பதை உணராமல் சிலர் இதனை பாராட்டுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களின் உண்மையான பின்னணி அனைத்தும் ஒன்றுபோல் உள்ளதால் இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

என்கவுன்டர் சம்பவங்களால் நீதித்துறை, அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மீதான நம்பிக்கை குறையும். பிரிட்டீஷ் ஆட்சி காலத்தை இச்சம்பவங்கள் நினைவுபடுத்தும். எந்தவொரு வழக்கும், தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும். உடனடி மரணமே சரியான தண்டனை என்ற கோட்பாடு உண்மையானது அல்ல; அது ஒரு மாயை” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

தொடர்ந்து இவ்வழக்கில் காவல்துறையின் இறுதி அறிக்கையை ரத்து செய்த நீதிபதி, விசாரணையை நியாயமாகவும், முழுமையாகவும் நடத்தி 6 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.