தமிழ்நாடு

பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்

webteam

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரத்தில் கைதான பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கல்யாணராமன், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் சாஹிர்கான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார். 

இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்க கூடிய நபிகள்நாயகம் பற்றி தரக்குறைவான வார்த்தைகள் கொண்டு முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும்,  இஸ்லாம் மதத்தை கொச்சைப்படுத்தி இளைஞர்களை வன்முறை பாதைக்கு மாற்றும் நோக்கில் பதிவிடுவதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில்,பிப்ரவரி 2ஆம் தேதி அகமதாபாத்திலிருந்து சென்னை திரும்பிய கல்யாணராமனை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி தொடரபட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நவம்பர் மாதம் பதிவிட்டது தொடர்பாக தற்போது கைதாகி இருப்பதாகவும், உயர்நீதிமன்றம் வகுத்த விதிகளை பின்பற்றாமல் கைது செய்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதேபோல 2016ஆம் ஆண்டு கருத்தை பதிவிட்ட புகாரில் சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கில், இதுபோன்ற கருத்துக்களை பதிவிடவோ, பேசவோ மாட்டேன் என கல்யாணராமன் அளித்த உத்தரவாதத்தை மீறி மத ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒரு மதம் சார்ந்த ஆதாரமற்ற கருத்துக்களையும், அவதூறு பரப்புவதும் ஒருபுறமிருப்பதாகவும், அதேசமயம் பிற மதத்தையும், அதில் தெய்வமாக போற்றப்படுபவர்கள் பற்றியும் தீவிரமாக ஆராய்ந்து, தான் புரிந்துகொண்டவற்றை கருத்துக்களாக பதிவிடுவதும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மத நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கும்போதெல்லாம், கருத்து சுதந்திரம் சவாலை எதிர்கொள்வதாகவும் பதிவு செய்துள்ளார். இவ்வாறு கருத்து சுதந்திரத்தின்படி தெரிவிக்கும் கருத்துக்கள் பல்வேறு பிரிவினரிடையே விரோதத்தை தூண்வதாக அமையாது எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதனடிப்படையில் முகநூலில் கல்யாணராமன் பதிவிட்டது முகமது நபிகள் நாயகம் பற்றி அவர் படித்து, ஆராய்ந்து அவர் புரிந்துகொண்டததைதான் எழுதியிருக்கிறார் என்றும், இஸ்லாம் மதத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் பதிவிடவில்லை என்பதால், கல்யாணராமனுக்கு ஜாமின் வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார்.