மதுரை மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவில் பிரசாதமாக அளிக்கப்படும் கூழ் அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரே பாத்திரத்திலிருந்து வழங்கப்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
செல்லாயி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் முளைப்பாரி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பல்வேறு சமூகத்தினருக்கும் தனித் தனி பாத்திரங்களிலிருந்து கூழ் அளிக்கப்படுவதாகவும் கூறி மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குப் பதிவு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோவிலில் சாமி கும்பிடுவதில், விபூதி வழங்குவதில், மற்றும் கூழ் காய்ச்சுவதில் எந்தவித தீண்டாமையும் கடைபிடிக்கப்படவில்லை எனக் கூறியது. அதே சமயத்தில் கூழ் பிரசாதத்தை ஒரே அண்டாவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. முளைப்பாரி திருவிழாவில் தாழ்த்தப்பட்டோரும் பங்கேற்பது தொடர்பாக கீழமை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாரர் நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் கூறினர்.