விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது. இதனிடையே வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான கருத்துகளை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனிடையே, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் முறையிட்டனர். ஆனால், நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு தாமாக முன் வந்து விசாரிக்க மறுத்துவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்காக பதிவு செய்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் அமர்வு ஹெச்.ராஜா தொடர்பான வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்தது. மேலும் இவ்விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னை ஆஜராக உத்தரவிட சி.டி செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் ஹெச்.ராஜா முறையிட்டுள்ளார். அதில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி தலைமை நீதிபதிதான் தன்னிச்சையாக வழக்குத் தொடர முடியும் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் இந்த முறையிட்டை முன்வைத்துள்ளார். அப்போது, இதுதொடர்பான உத்தரவு நகல்களை தாக்கல் செய்யக்கோரிய தலைமைநீதிபதி, இதுகுறித்து தான் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.