தமிழ்நாடு

உயர்மின் அழுத்த கோபுர பணிகளை அப்படியே நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

உயர்மின் அழுத்த கோபுர பணிகளை அப்படியே நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்

webteam

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளில் தற்போதைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருப்பூரில் இருந்து சத்தீஸ்கர் வரை 800 கிலோவாட் மின்சாரத்தை எடுத்துச்செல்ல உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க தடை விதிக்க கோரி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி உள்ளிட்ட 7 விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகளில் தற்போதைய நிலையே தொடரும் என உத்தரவிட்டார்.

அதாவது தற்போது உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் எந்த நிலையில் உள்ளதோ அத்துடன் பணிகளை நிறுத்த வேண்டும். மீண்டும் நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரை பணிகளை தொடரக்கூடாது என்பதே இதன் விளக்கம் எனக்கூறு வழக்கை நீதிபதி ராஜா ஒத்திவைத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தமிழக அரசு, மின்சாரத்துறை, உயர்மின் கோபுரம் அமைக்க டெண்டர் எடுத்திருப்பவர்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.