சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க தமிழகம் முழுவதும் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 16 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார். இதற்காக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சென்னை வந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் டிராபிக் ராமசாமி புதிய மனுத்தாக்கல் ஒன்றை செய்தார். இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் காங்கிரஸார் பேனர் வைக்க அனுமதி வாங்கியது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்தது. அதில் பேனர் வைப்பதற்கு ஒரு நாள் முன்பு அனுமதி வாங்கியுள்ளதை சுட்டிகாட்டிய நீதிமன்றம் விதிகள் மீறப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதை தவிர சிறு முன்னேற்றமும் இல்லை என வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதாவது சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அரசியல் கட்சி உட்பட யாரும் பேனர் வைக்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விதிகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் கண்டிப்புடன் முழுமையாக பின்பற்றுவதாக தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு தெரிவித்து வழக்கை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.