தமிழ்நாடு

மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மீன் சந்தை அமைக்கப்படவில்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி

மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மீன் சந்தை அமைக்கப்படவில்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் திட்டத்தை உருவாக்கி டிசம்பர் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்கடலில் மீன் பிடிக்கும் படகின் நீளம் 15 மீட்டருக்கு மேல் இருக்க கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்றும் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் திட்டத்தை உருவாக்கி டிசம்பர் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

டிசம்பர் 17 முதல் இந்த வழக்கு முடியும் வரை சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் அருகில் சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் இயங்கி வருவது ஏன் எனவும் மெரினாவுக்கு அல்லது மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் மீன் சந்தை அமைக்கப்படவில்லையா எனவும் கேள்வி எழுப்பினர்.

இதுவரை எத்தனை மீனவர்கள் கடை அமைக்க மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் மாற்று இடம் வழங்க வேண்டியவர்களின் விவரங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.