கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார் முகநூல்
தமிழ்நாடு

மக்கள்தொகை குறித்து பேசிய முதல்வர்கள்.. குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவது சரியான தீர்வா?

அதிக குழந்தைப்பிறப்பு சரியா? விளக்குகிறார் கல்வி உளவியலாளர் சரண்யா ஜெய்குமார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீபத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், குழந்தைப் பேறு அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்கள். ஏற்கெனவே, மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியா முதலிடத்தில் இருப்பதால், இரு முதல்வர்களின் கருத்துகளும் பேசுபொருளாக மாறின.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தவகையில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதென்பது சரியான ஒரு தீர்வா என்பது குறித்து நமக்கு விளக்க இருக்கிறார். கல்வி உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெயக்குமார். அவர் கூறுவற்றை இங்கே அறியலாம்:

“பொருளாதார காரணங்களுக்காக மக்கள் தொகையை குறைப்பதும் அதிகரிப்பதும், இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் ஒரு விஷயமாகதான் இருக்கிறது. 1952-ல் இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு வந்தபோது, அதை சரியாக நடைமுறைப்படுத்தியது தென் இந்தியாதான்.

அதேநேரம், மக்கள் தொகை பொறுத்து நாடாளுமன்ற சீட்டுகளை நிர்ணயிக்க கூடாது என்று இந்திரா காந்தியால் கூறப்பட்டது. மேலும், மக்கள் தொகையை குறைக்கும் மாநிலங்களை தண்டிக்கும் விதமாகவும், பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அவை இருந்துவிடக் கூடாது என்றும் கூறினார் அவர்.

ஆனால், 2024 ஆம் ஆண்டில் இதற்கு மாறான கருத்துக்கள் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து வரும்போது, இதன் மொத்த சுமையையும் பெண்களின் மீதும் குழந்தைகளின் மீதும் திணிப்பது தவறு என்றுதான் நான் கருதுகிறேன்.

இன்று இருக்கக்கூடிய சூழலில், பொருளாதார - உணர்வு / உடல் ரீதியான சரியான திட்டமிடுதல் இல்லாமல் ஒரு இணையால் பெறப்படும் குழந்தை என்பது ஒரு குடும்பத்திற்கு பொருளாதார சுமை என்றுதான் கூறவேண்டும்.

கல்வி உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெய்குமார்.

ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், ஒரு குடும்பத்தால் அதை கையாள முடிகிறது. ஆனால், மூன்று குழந்தையாக செல்லும்போது, குழந்தைகளின் தேவைகளை செய்யும் சூழல்கள் குடும்பத்தில் இல்லாமல் போகிறது. அச்சூழலை கஷ்டப்பட்டுதான் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இன்றைய வாழ்வில் பெண்களின் வாழ்க்கையில் குடும்பமும், பணியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக பயணிக்கிறது. ஆண்களுக்கு அப்படி கிடையாது. பெரும்பான்மையாக அவர்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அப்படியிருக்கும் போது குழந்தைப் பேறை அதிகப்படுத்த வேண்டும் என்றால், balance என்பது பெண்களுக்கு அதிகளவு தேவைப்படுகிறது. இன்று வீட்டிலிருந்தே வேலை செய்தாலுமே, கடினப்பட்டு வேலை செய்யும் பெண்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

இன்னொருபக்கம் கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்து, தனிக்குடும்பமாக வாழும் நிலை அதிகரித்திருப்பதை காண முடிகிறது. இருவருமே வேலைக்கு செல்கின்றனர், கூட்டுக்குடும்பம் எனும் பட்சத்தில், ஒரு குழந்தை என்றிருந்தால்கூட day care மாதிரியான இடங்களில் விடுவதற்கே இவர்கள் சம்பாதிக்கும் பாதி பணம் போய்விடுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதிக குழந்தைகள் என்பது எப்படி அவர்களுக்கு சாத்தியமாகும் ஒன்றாக இருக்கும்?

சமீபகாலமாக குழந்தை வளர்ப்பில் ஆண்களில் பங்கு அதிகரித்திருப்பதை காண முடிகிறது.. ஆனால், பொறுப்பு என்பது பெண்களில் மீதுதான் இருக்கிறது. குழந்தைக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் கூட அதற்கு காரணமாக பெண்களைதான் காட்டுகிறது இந்த சமுதாயம்.

ஆண்களை உளவியல் ரீதியாக இந்த விஷயத்தில் ஒப்பிட்டால், தனது தந்தை குடும்பத்தில் எந்த அளவிற்கு ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை ஆண்கள் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள் . ஆனால், இதிலிருந்து விலகி வந்து குடும்பத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஆண்களின் சதவீதம் 10 -15% மட்டுமே. இது அதிகரிக்க வேண்டும்.

பெண்களுக்கு வேலை, பொருளாதாரம், உளவியல் என அனைத்திலும் சரியான ஒரு உறுதுணை கணவரிடத்திலிருந்தே கிடைத்தால், இரண்டு , மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலை உருவாக வாய்ப்புள்ளது. பிரான்ஸ், கனடா மாதிரியான நாடுகளில் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தெடுக்க அரசாங்கம் பணம் கொடுக்கிறது.

ஆனால் இங்கே இருக்கிற குழந்தைகளில் பலர் போதைப்பொருள் போன்றவற்றிக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். முதலில், இவர்களை சரிசெய்யும் முன்னெடுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இருக்கின்ற பிரச்னைகளை நாம் சமாளிக்காமல், மேலும் மேலும், மக்கள் தொகையை மட்டுமே அதிகரித்து கொண்டு செல்லும் போது அது சரியான ஒன்றாக அமையாது.

இங்கே, ஒரே குழந்தையாக இருக்க கூடிய பிள்ளைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகள் அதிகம் இருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இப்படி இருக்கின்ற குழந்தைகளுக்கே மனநலம் சார்ந்த அறிவுறுத்தல்கள் சரியாக வழங்கப்படாத சூழலில், அதிக குழந்தைகளை பெறுவது எப்படி சரியானதாகும்? Gross domestic product (GDP)-ல் எப்பொழுது மனநல ஆரோக்கியமும் உள்ளடக்கப்படுகிறதோ.. அப்பொழுதுதான் மனிதவளம் என்பது மேம்படும்.

இன்றைக்கு இந்தியாவில் இருக்ககூடிய இளம் பருவத்தினர் பலரும், நிழலை நிஜமாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். உறவுகளில் தெளிவின்மை, போதைப்பழக்கம் என பல விஷயங்களில் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும், குழந்தை வளர்ப்பு என்பது, தவறான வழியில் கையாளப்படுகிறது. ஒன்றை போராடி பெற்றுக்கொள்ளுவது என்னவென்றே பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்காமல், கேட்டவுடன் அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு தவறான வளர்ப்பு முறையை கையாண்டு வருகிறார்கள்.

நிலைமை அப்படியிருக்க, நாடாளுமன்ற தொகுதிகள் குறைகிறது, மனித வளம் குறைகிறது என்ற அரசியல் நெருக்கடி காரணமாக, இரு மாநில முதல்வர்களும் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

சாதாரண மனிதன் இதை கூறும் போது தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயம், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இதை தெரிவிக்கும்போது மக்களிடத்தில் வேறு விதமாக இதை கொண்டு சேர்க்கிறது. என்னைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் உறுதுணை நமக்கு இல்லாமல் மக்கள் தொகை அதிகரிப்பு என்பதை சரியானதாக இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.