போக்குவரத்து நெரிசல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்... ஸ்தம்பித்த போக்குவரத்து!

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள், ஒரே சமயத்தில் சென்னை நோக்கி படையெடுத்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

PT WEB

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள், ஒரே சமயத்தில் சென்னை நோக்கி படையெடுத்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சில நகரங்களில் இருந்து ஊர் திரும்ப போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தீபாவளியை ஒட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், அதிகளவிலான பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். பண்டிகை கொண்டாட்டம் முடிந்து, இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும், ரயில்களிலும் நேற்று பகலில் இருந்தே சென்னை திரும்பினர்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி முதல் வீராபுரம் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இதேநிலைதான் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எதிர் திசையில் உள்ள இரண்டு வழித்தடங்களில், சென்னைக்கு செல்லும் வாகனங்களை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடலூர் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். வேப்பூர் மேம்பால கட்டுமானப் பணிகளால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளை பிடிப்பதற்காக முண்டியடித்து கொண்டு பயணிகள் ஏறினர். சிலர் ஜன்னல் வழியாக இருக்கைகளை பிடித்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஓசூர், சேலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கும், உள்ளூரான திருப்பத்தூர், குடியாத்தம் பகுதிகளுக்கு செல்ல பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். போதிய பேருந்துகள் இல்லாததால், வரும் பேருந்துகளில் ஏற குழந்தைகள் மற்றும் உடமைகளோடு முண்டியடித்து ஏறும் சூழல் நிலவியது.

மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிகளின் வசதிக்காக 280 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும், முன்பதிவு பேருந்துகளே அதிகம் வந்ததால் சாமானிய பயணிகள் பாதிக்கப்பட்டனர். முன்பதிவு செய்தவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல் இல்லாததால் அவதியடைந்தனர்.

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூட்டம் அலைமோதியது. இடம் கிடைக்காததால் படிகளில் தொங்கியவாறு பலர் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சாரை சாரையாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு மக்கள் வந்தனர்.

போதுமான பேருந்துகள் இல்லாததால் மணிக்கணக்கில் பெண்கள் உள்ளிட்டோர் காத்திருந்தனர். உதகைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலனவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால், சேரிங் கிராஸ், படகு இல்ல சாலை, கமர்சியல் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

தீபாவளியை கொண்டாட வந்தவர்களும், சுற்றுலாவுக்காக சென்றிருந்தவர்களும் மீண்டும் சென்னை திரும்புவதற்காக, ராமேஸ்வரம், ராமநாதபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டனர். இதேபோல், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவிலான மக்கள் புறப்பட்டனர்.