தமிழ்நாடு

போகிபண்டிகை கொண்டாட்டத்தால் கடும் புகைமூட்டம்! காற்று மாசுபாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

போகிபண்டிகை கொண்டாட்டத்தால் கடும் புகைமூட்டம்! காற்று மாசுபாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

webteam

போகி பண்டிகையான இன்று சென்னையில் பல பகுதிகளில் அதிகாலை முதலே பழைய பொருட்களை மக்கள் எரித்து வருகின்றனர். இதனால் நகரின் பல்வேறு சாலைகளில் அடர்ந்த புகை மூட்டமும், சுவாசிக்க முடியாத அளவில் காற்று நச்சுத்தன்மை கொண்டதாகவும் மாறி உள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடும் புகைமூட்டம் நிலவுகிறது. மற்றும் முக்கிய சாலைகளில் புகை மூட்டமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முன்விளக்கு எரியவிட்டபடி பயணிக்கின்றனர்.

மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும், மறுநாள் பிறக்கும் தை திருநாளில் பழையன கழித்து புதியன புகவேண்டும் என்பதற்காக போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதனையொட்டி போகி பண்டிகையான இன்று விடியற் காலை முதலே நகரம் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள வீடுகளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் தீயிட்டு கொளுத்தி போகி பண்டிகை கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் கொண்டாடப்பட்ட போகிப்பண்டிகையால் காற்றின் தரம் மோசமடையத் தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களின் தரவுகளின்படி மணலி, ஆலந்தூர், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் மோசமடைந்துள்ளது எனவும், இன்னும் சில மணி நேரங்களில் மோசமான நிலையை எட்டக்கூடும் எனவும் தெரிகிறது.

அதேபோல புதுச்சேரியிலும் நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்த தேவையற்ற பொருட்களை மக்கள் தீயிட்டு கொளுத்தி போகி பண்டிகையை கொண்டாடினர். மாசுக்கட்டுப்பாட்டு துறை சார்பில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் டயர்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் எரிக்கப்படவில்லை.