பனி மூட்டம் மற்றும் போகி புகை மூட்டதால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை இன்று பாதிக்கப்பட்டது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான குளிர் காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான குளிர் காற்று வீசுவதால் ஊட்டி, மற்றும் கேரளாவில் இருக்கும் சூழ்நிலையே சென்னையிலும் நிலவுகிறது. சமீபகாலமாக கடும் பனிபொழிவு நிலவி வருவதால் காலை 8 மணி வரையில் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் போகி பண்டிகையொட்டி இன்று அதிகாலை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீவைத்து எரித்தனர். இதனால் கடும் புகை மூட்டம் உருவானதால் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய ஏராளமான விமானங்கள் தாமதமாகின. சென்னையில் இருந்து பெங்களூரு, மும்பை செல்லவிருந்த ஜெட்ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், அந்தமான், பெங்களூரு, புனே, மும்பை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை வந்துச் செல்லும் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் தாமதமாக வந்ததது. இதனால் விமான பயணிகள் மிகுந்த சிரமமடைந்தனர்.