வலுவிழந்த புரெவி புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை வரை கனமழை தொடரும் என்றும், டிசம்பர் 8 வரை சென்னையில் விட்டு விட்டு மழை பொழியும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர் “புரெவி புயல் வலுவிழந்து டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலையில் பால்க் நீரிணை / மன்னார் வளைகுடாவில் நுழைந்தது. இது இப்போது 48 மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்திலேயே உள்ளது. குறைந்த அழுத்த பகுதி இரண்டு முகடுகளுக்கு இடையில் பிடிபட்டு சிக்கிக்கொண்டது, எனவே அது ஒரே இடத்தில் தங்கியுள்ளது. ஆனால் தற்போது அது பலவீனமடைய தொடங்கியுள்ளது, இது நாளைக்குள் குறைந்த அளவிலான காற்றால் ஒதுக்கித் தள்ளப்படும், இதனால் பல இடங்களில் டிசம்பர் 8 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக டெல்டா, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி, காரைக்கல், சென்னை ஆகிய இடங்களில் நேற்று போலவே இன்றும் மழை பெய்யும். அருகிலுள்ள பகுதிகளான ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளிலும் மழை இருக்கும். கடலூர் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்னும் ஒரு நாள் கனமழை நீடிக்கும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை வாய்ய்பு இல்லை. டிசம்பர் 8 வரை சென்னையில் விட்டு, விட்டு மழை பெய்யும்” என தெரிவித்துள்ளார்