திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்த நிலையில், பச்சகுப்பம் மேம்பாலத்தின் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புற டயர் கழன்று விழுந்ததால் மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்தது. லாரி ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டத்தில், வல்லம், செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்தது. கும்பகோணத்தில் பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதேபோல் திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருச்சி திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் கனமழை கொட்டியது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
மதுரையில் சூறைக்காற்றுடன் மழை பெய்த கனமழை
மதுரையில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம் என பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகளில் விழுந்தன. தீயணைப்புத் துறையினர் மரங்களை அகற்றுவதற்காக செல்லக் கூட முடியாத அளவிற்கு ஆங்காங்கே அதிக அளவிலான மரங்கள் விழுந்ததால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டன.
பல இடங்களில் மின் கம்பங்கள் உடைந்து சாலைகளில் விழுந்ததில் மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது. முக்கிய சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட்ட இரும்புத் தடுப்புகள் சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்தன. மதுரையில் திடீரென சூறாவளி காற்றுடன் சுமார் அரை மணி நேரம் மட்டுமே பெய்த கனமழை, பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு சென்றன.