தமிழ்நாடு

கோவை, நீலகிரியில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு

கோவை, நீலகிரியில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு

webteam

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கோவை, நீலகிரி‌ உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. 

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், தொடர்ந்து கன மழை பெய்து வரும் நீலகிரி மாவட்டத்திலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அளிக்கும் புகார்கள் அடிப்படையில், உடனடியாக நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். 

கோவை வடக்கு மண்டல அலுவலகத்தை 0422 - 2243133, தெற்கு மண்டலத்தை 0422 - 2252482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கிழக்கு மண்டலத்திற்கு 0422-2572696 மற்றும் 2577056 , மேற்கு மண்டலத்திற்கு 0422 - 2551700, மத்திய மண்டலத்திற்கு 0422 - 2215618 என்ற எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இவை தவிர கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக எண்களான 0422 -2390261, 62 மற்றும் 63 எண்களை தொடர்பு கொண்டும் மக்கள் புகார்களை தெரிவிக்கலாம். 81900-00200 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 74404 - 22422 என்ற கைப்பேசி எண்களும் புகார்களை தெரிவிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன.