குடை பிடித்துக்கொண்டு பாடம் படிக்கும் மழலைகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கொட்டித் தீர்க்கும் கனமழை.. குடை பிடித்துக்கொண்டு பாடம் படிக்கும் அவல நிலையில் அரசுப் பள்ளி மழலைகள்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொழிந்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முடங்கிய நிலையில், சிறு சிறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

webteam

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரசுப் பள்ளியில் மழைக்கு குடைபிடித்துக்கொண்டு மாணவர்கள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலச்சேத்தூர் அரசு பள்ளியில் ஓடுகளால் ஆன கூரைகள் உடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இது குறித்து பலமுறை முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர்தேங்கி சேறும், சகதியுமாக இருப்பதால் மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்னர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொழிந்த தொடர் மழையால் குளு குளு சூழல் நிலவியது. அரக்கோணம் நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதி இல்லாததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் பொழிந்து வரும் தொடர் மழையால் வீடூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மயிலம் வானூர், விக்கிரவாண்டி, புதுச்சேரி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீருக்கு ஆதாரமான வீடூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக்கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.