வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நள்ளிரவில் தொடங்கிய மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, துரைப்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் 2 சென்டிமீட்டர் தாண்டி மழை பதிவானது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், மதுராந்தகம், அச்சரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. வேலூர் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. காட்பாடி, அடுக்கம்பாறை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஆரணி, களம்பூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதே போன்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
செப்டம்பர் மாதத்தில் பொதுவாக தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் கடலோர மாவட்டங்களில் இந்த அளவுக்கு மழை பொழிவு இருக்காது. ஆனால் கடந்த சில நாட்களாக வட உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர்,திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் கன மழை தொடர்கிறது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.