கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரயில் நிலையம் முன்பு தேங்கியுள்ள மழைநீரால், ரயில்நிலையம் சென்ற பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கோட்டைபிரிவு என்ற இடத்தில் தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதில் 2 கார்கள் சிக்கிக் கொண்டன.
அதேபோல், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சுவர் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, போக்குவரத்து ஸ்தம்பித்தது.
உடுமலைப்பேட்டை அடுத்த அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 85.25 அடியை எட்டியுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.