கனமழை முகநூல்
தமிழ்நாடு

சென்னை: வெளுத்து வாங்கிய கனமழை; வீடுகளில் புகுந்த மழை நீர்!

சென்னையில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கனமழையால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர் சுரங்கப்பாதையில் மழைநீர் நிரம்பியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

PT WEB

செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடதமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், நேற்று மாலை சென்னை மாநகரில் மழை பெய்தது. தொடர்ந்து இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது.

அண்ணாநகர், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கோயம்பேடு என மாநகர் முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால், சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.

இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கோயம்பேடு - வடபழனி சாலையில் இரண்டரை அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன.

பல்வேறு பகுதிகளில் 10 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ததன் காரணமாக முக்கியமான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது. துரைசாமி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதைகளில் தண்ணீர் சூழ்ந்த நிலையில், சிறிது நேரத்தில் வெளியேற்றப்பட்டு விட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெரம்பூர் சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியதால் மூடப்பட்டது. தேங்கிய தண்ணீரை வெளியேறும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக திருச்சி, கோவை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், திருவள்ளூரில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.