கனமழை புதிய தலைமுறை
தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் பரவலாக விடிய விடிய கனமழை!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,044 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சோத்துப்பாறையில் 126 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ரமேஷ்கண்ணன்

தேனி மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வந்த நிலையில் காலையிலும் மழை தொடர்கிறது.

இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பரவலாக ஒரே நாளில் 1,044 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோத்துப்பாறையில் 126 மி.மீ., தேக்கடியில் 108 மி.மீ., வீரபாண்டியில் 105 மி.மீ.,பெரியகுளத்தில் 96 மி.மீ., அரண்மனைப் புதூரில் 93 மி.மீ., சண்முகா நதியில் 88 மி.மீ, ஆண்டிபட்டியில் 86 மி.மீ., போடிநாயக்கனூரில் 84 மி.மீ., முல்லைப் பெரியாறு அணையில் 83 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

வைகை அணையில் 75 மில்லி மீட்டர், மஞ்சளாறில் 52 மில்லி மீட்டர், கூடலூரில் 33 பில்லி மீட்டர், உத்தமபாளையத்தில் 15 மில்லி மீட்டர் என 50 மில்லி மீட்டருக்கும் கீழ் மழை பதிவாகியுள்ளது.

மேலும் தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்துப் பாறை, சண்முகாநதி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அம்மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராக நதி, மூல வைகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை தொடர்வதாலும், அணைகளில் இருந்து நீர்த்திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாலும் ஆறுகள், அதன் வழித்தடங்கள் மற்றும் நீர்நிலைகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சஜீவனா

முன்னதாக கன மழையால் தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (18.12.23) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.