தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை: வானிலை மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை: வானிலை மையம்

webteam

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கை மற்றும் மன்‌னார் வளைகுடா பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, தற்போது இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும் அதன்காரணமாக‌ அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியி‌ல் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் ‌புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும், ஒருசில நேரத்தில்‌ ‌கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் ‌புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் ஒருசில நேரத்தில்‌ ‌கனமழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூரில் 9 செமீ மழையும் ஆனைக்காரன் சத்திரம், பரங்கிப்பேட்டை, சென்னை டிஜிபி அலுவலகத்தில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளன. தாமரைப்பாக்கம், மரக்காணம், மணிமுத்தாறு, சீர்காழியில் 6 செமீ மழையும் சோழவரம், சாத்தான்குளம், ஜெயங்கொண்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், புதுச்சேரி, காரைக்காலில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது.