தமிழகத்தில் சுமார் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்து பரவலாக விட்டுவிட்டு கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று (நவ.14) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் இன்று (நவ.,14) சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில, காரைக்காலில் அதிகபட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கன முதல் மிக கனமழை வரை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அச்சூழலில் ஏற்படும் அனைத்து தேவைகளையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை தயார் நிலையில் வைக்க வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ”மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. கடற்கரையோர மாவட்டங்களில் 121 இடங்களில் புயல் பேரிடர் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகை மற்றும் திருவாரூர், கடலூரில் அதிக மழை பொழிந்துள்ளது. கனமழையால் இதுவரை பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. சிறுசிறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எந்தத் தகவலும் இல்லை. கனமழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.