கனமழை ட்விட்டர்
தமிழ்நாடு

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: வேதவள்ளி

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு குறிப்பாக மேற்கு தொடர்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, இனி வரக்கூடிய நாட்களில் கனமழை முதல் மிக கனமழை வரை மலை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் ஆங்காங்கே மழை பெய்தநிலையில் பெய்த மழை வெப்பச்சலன மழை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இனி பெய்ய போகும் மழை என்பது வெப்ப சலனமழை இல்லை. வேறு என்ன காரணம்? பார்க்கலாம்...

குமரி கடலில் பக்கத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது இனி வரும் நாட்களில் நிலப்பகுதிகளை நோக்கி நகரவுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையானது பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதன்படி தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே 18 ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மே 19 ஆம் தேதி நீலகிரி கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன்படி ஒட்டு மொத்தமாக 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை 9 செமீ மழையானது தமிழகத்தில் பெய்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 5 செமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 43% குறைவு. ஆகவே, இனி வரும் நாட்களில் இதனை ஈடுகட்டும் வகையில் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.