உள் தமிழகத்தில் இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதற்கிடையே சில இடங்களில் மழையும் பெய்தது. ஆனாலும் வெப்பத்தின் தாக்கமே அதிகமாக காணப்பட்டதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். அத்துடன் மழையில்லாத காரணத்தால் நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழகம் நோக்கி வந்த புயலும், ஒடிசாவிற்கு சென்றதால் அனல் காற்று வீச்சு தமிழகத்தில் அதிகரித்தது. இந்நிலையில் கோடை கத்திரி வெயில் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஆனாலும் உள் தமிழகத்தில் இயல்பைவிட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், மதுரை, நாமக்கல், கரூர், தருமபுரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.