இன்று முதல் வட தமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் இன்று முதல் வட தமிழகப் பகுதிகளில் வெப்பம் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவு புயலாக வலுப்பெறும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில் நாளை மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் முதலில் வடமேற்கு திசையில் பின் வடக்கு வடகிழக்கு திசையில் நகரும். இந்தப் புயலுக்கு ஆம்பன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும். 20-ஆம் தேதி மேற்கு வங்கம் அல்லது பங்களாதேஷ் ஒட்டிய பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக இது குறித்து விடுக்கப்பட்ட செய்தியின்படி, இதனால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பு காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மீனவர்கள், தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், லட்சத்தீவு குமரிக் கடல், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேரடியாக மழை இருக்காது என்றும், புயல் விலகிச் செல்வதால் வரும் நாட்களில் தமிழகத்தில் குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.