இன்று முதல் தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மழையில்லாத காரணத்தால் நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழகம் நோக்கி வந்த புயலும், ஒடிசாவிற்கு சென்றதால் அனல் காற்று தமிழகத்தில் அதிகரித்தது. இந்நிலையில் கோடை கத்திரி வெயிலும் சேர்ந்துக்கொள்ள வெயிலின் தாக்கம் கொடுமையானது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கத்தரி வெயில் நிறைவடைந்தது. ஆனால் தொடர்ந்து வெப்பக்காற்று வீசி வந்தது. இந்நிலையில் ஈரப்பதம் மிகுந்த கடல்காற்று வீச தொடங்கியுள்ளதால் இன்று முதல் தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கடல் காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது. இதனால் சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 5ம் தேதி முதல் கேரளாவில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.