பில்கிஸ் பானு விவகாரத்தில் நடிகை குஷ்பு நியாயத்தின் பக்கம் நின்றுள்ளதாக பாராட்டியுள்ளார் சசி தரூர்.
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு 2008இல் ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இச்சூழலில், கடந்த 15 ஆண்டுகளாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் 11 பேரையும், குஜராத் மாநில அரசு அண்மையில் விடுதலை செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய நடிகை குஷ்புவும் இதை கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில், “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு , பெண்ணின் ஆன்மாவை சிதைத்த எந்த நபரும் விடுதலையாகக் கூடாது. அப்படிச் செய்தால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் நேரிட்ட அவமானம். பில்கிஸ் பானு மட்டுமல்ல எந்தவொரு பெண்ணுக்கும் அரசியல் மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட ஆதரவு தேவை” என்று கூறினார்.
இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர், பில்கிஸ் பானு வழக்கில் குஷ்பு நியாயத்தின் பக்கம் நின்றுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாரிது குஷ்புவா? வலது சாரியாக இல்லாமல் எது சரியோ அதற்கு நிற்கிறீர்கள். பெருமையாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளின் விடுதலையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் குஜராத் அரசுகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், விடுவிக்கப்பட்ட 11 பேரையும் இந்த வழக்கில் மனுதாரா்களாக சோ்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதையும் படிக்க: ‘ராகுல் காந்தியின் குழந்தைத்தனம்’- விரிவான கடிதத்தோடு விலகினார் குலாம் நபி ஆசாத்