தமிழ்நாடு

வெளிநாடு, வெளியூர் பயணிக்காத 25 பேருக்கும் கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதாரத்துறை

வெளிநாடு, வெளியூர் பயணிக்காத 25 பேருக்கும் கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதாரத்துறை

webteam

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ‌67ஆக அதிகரித்துள்ள நிலையில், அவர்களில் 25 பேர் வெளிநாடு, வெளியூர் என எங்கும் பயணம் செய்யாதவர்‌கள் என தெரியவந்துள்ளது.

சென்னையில் இதுவரை 21 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ‌ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரியில் 5 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 4 பேர் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. சேலத்தில் 6 பேரும், மதுரையில் 4 பேரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். செ‌ங்கல்பட்டு மாவட்டத்தில் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டை சேர்ந்த பெண் ஒருவர் குணமாகி டிஸ்சார்‌ஜ் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெ‌ற்று வரும் நிலையில், ஏற்கெனவே ஒருவர் டிஸ்சார்ஜ் செ‌ய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உள்ளது. ‌ மேலும் நெல்லை, கோவை, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சை, விருதுநகர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக தமிழகத்தில் 67 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 25 பேர் வெளிநாடு‌கள், வெளியூர்களுக்கு பயணம் செய்யாதவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 43 ஆயிரத்து 537 பேர் ‌தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.