கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக கைதான ஹீலர் பாஸ்கர் கோவை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக ஹீலர் பாஸ்கர் வதந்திகளை பரப்பி வருவதாக சர்ச்சை எழுந்தது. அது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.
பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட சுகாதாரத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
இதனைதொடர்ந்து கோவை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹீலர் பாஸ்கரை வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் சிறையிலிருந்து விடுதலையானார்.