புதுக்கோட்டை தஞ்சை சாலையில் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், தேர்வெழுத பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது மாணவரை தலைமையாசிரியர் முறையாக முடி வெட்டவில்லை எனக்கூறி பள்ளியிலிருந்து அனுப்பிய நிலையில், மாணவர் பள்ளிக்கு அருகிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மாணவரின் உயிரிழப்புக்கு பள்ளி ஆசிரியர்கள்தான் காரணம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து அப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் இன்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்வதால் அவர்களிடம் காவல் துறையினரும் கல்வித் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.