மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்.எல்.ஏ  PT WEB
தமிழ்நாடு

"என்னை மன்னித்து விடுங்கள்" - திடீரென மாணவர்கள் காலில் விழுந்த எம்.எல்.ஏ; நடந்தது என்ன?

சேலத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் அரசுப் பள்ளி மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பாகல்படி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 434 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் அருளானந்தம் தலைமை வகித்தார். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் கலந்து கொண்டு பேசினார். அப்போது மாணவர்கள் ஏற்கனவே நீண்ட நேரமாகக் காத்திருந்ததால் விரைவாகப் பேசிவிட்டு சைக்கிள் கொடுக்கலாம் என்று எம்.எல்.ஏ அருள் பேசத்தொடங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த திமுகவைச் சேர்ந்த ராஜி என்பவர், ”திமுகவைச் சேர்ந்த தங்களைப் பேச விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது" என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், விழாவில் மோதல் போக்கு ஏற்பட்டது.

பின்னர் நீங்களும் பேசுங்கள் என எம்.எல்.ஏ அருள், கூறியுள்ளார். அதற்கு அவர், "அது எப்படி எங்களைப் பேசவிடாமல் நீங்கள் பேசலாம்" உங்கள் அனுமதி பெற்று தான் நாங்கள் பேச வேண்டுமா" என்று திமுகவினர் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாக்குவாதம் நடந்த நிலையில், அப்போது பாமக எம்.எல். ஏ அருள், இங்கு நடந்தவை அனைத்திற்கும் மாணவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். "என்னை மன்னித்து விடுங்கள்" என்று மாணவர்கள் காலில் சட்டென்று விழுந்தார். அப்போது பலரும் அவரை தடுத்த நிலையில், இரண்டு முறை மாணவ மாணவிகள் முன்பாக விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இதனையடுத்து, இங்கு நடந்தவற்றை மறந்து விட்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், சைக்கிள் ஓட்டும்போது சாலையில் கவனம் செலுத்த வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுரை கூறிவிட்டு, மீண்டும் மாணவ மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார். இதை அடுத்து மாணவர்களுக்குச் சைக்கிள்களை வழங்கினார்.

பாமக சட்டமன்ற உறுப்பினர் மாணவர்கள் காலில் விழுந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது.