வங்கி வாடிக்கையாளர்களுக்கு 13 கோடி ரூபாய் பணம் வங்கியில் இருந்து அனுப்பபப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தவறு என வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலை சந்திப்பில் HDFC வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேருக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் வங்கியில் இருந்து தலா 13 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே வங்கி அதிகாரிகள் பணம் சென்ற வங்கி கணக்குகளை முடக்கம் செய்தனர். தொழிற்நுட்ப கோளாறு காரணமாக இந்த பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருக்கலாமா? அல்லது வங்கி இணையதளத்தை யாராவது முடக்கி விட்டார்களா? என சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தி.நகர் HDFC வங்கிக் கிளை வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக்கணக்கில் தலா 13 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து, வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். HDFC வங்கியில் இன்று காலை புதிய சாப்ட்வேரை அப்டேட் செய்யும் பணிகள் நடைபெற்றதாகவும், அப்போது சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 5 ஆயிரம், 10 ஆயிரம் என சிலரது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் அவர்களுக்கு சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்தது. வாடிக்கையாளரின் செலவு பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும்போது அதில் சில குழப்பம் ஏற்பட்டு, வரவு பக்கத்தில் சென்றதே இந்த குழப்பத்திற்கு காரணம் எனவும், குறுஞ்செய்தி பரவியதைத் தவிர பணம் ஏதும் அவர்களது வங்கிக் கணக்கிற்கு செல்லவில்லை எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் உள்ள சில எச்டிஎஃப்சி வங்கிக் கிளைகளில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், 30 சதவீதம் தொழிற்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைக்குள் இந்த பிரச்னை சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தேவையில்லாமல் யாரும் குழப்பம் அடைய வேண்டாம் எனவும் வங்கி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.