பொது விநியோகத் திட்டத்திற்காக மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மசூர் பருப்பு நச்சுத்தன்மை வாய்ந்தது, பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என சிவகங்கையைச் சேர்ந்த ஆதிஜெகநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். பொதுவிநியோகத் திட்டத்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்ய வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை வருகின்ற 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சிவகங்கை கழனிவாசலைச் சேர்ந்த ஆதிஜெகநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “நான் ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாளிதழ் ஒன்றில், ரேசன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இந்த மசூர் பருப்பு விசத்தன்மை வாய்ந்தது. இதைப் பயன்படுத்த தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள் ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் பெற்று பயன்படுத்தி வருகின்றனர். 2006ல் மசூர் பருப்பு மதிய உணவுத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த பருப்பை உட்கொள்ளும் போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் இந்த பருப்பால் ஏற்படும் தீமைகள் குறித்து, அரசுக்கு அறிக்கை அளித்து, மதிய உணவுத்திட்டத்தில் மசூர் பருப்பை பயன்படுத்துவதைத் திரும்ப பெறுமாறு அரசிடம் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து அரசு பல்வேறு மட்டங்களில் ஆய்வு நடத்தியதில் மசூர் பருப்பு மற்றும் கேசரி பருப்பில் விசத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டது. இதனை உட்கொள்ளும் போது பல்வேறு நோய்கள் வருவதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மதிய உணவுத்திட்ட்த்தில் மசூர் பருப்பை பயன்படுத்த தடை விதித்து 1.3.2007ல் சமூக நலத்துறை மற்றும் மதிய உணவுத்திட்டம் அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், 6.3.2017ல் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர், துவரம் பருப்பு / மசூர் பருப்பை பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த பருப்புகள் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டால், மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், 30 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, மசூர் பருப்பு கொள்முதல் செய்வதற்காக டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், 26.06.2017ல் வெளியிட்டுள்ளார். இந்த பருப்பால் உடல்நலம் பாதிக்கப்படும் என அறிந்தும் இந்த பருப்பை கொள்முதல் செய்வது சட்ட விரோதம். எனவே, பொதுவிநியோகத் திட்ட்த்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்ய வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு, பொதுவிநியோக திட்டத்திற்கு மசூர் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலர், நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.