உயர்நீதிமன்றம் கோப்பு படம்
தமிழ்நாடு

“கடந்த பத்தாண்டுகளில் நடந்த மாணவர்கள் மோதல் வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும்” - நீதிமன்றம்

சென்னையில் கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் : வி.பி.சுப்பையா

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவர் சுந்தர்

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்ரி மரணம் அடைந்தார். இதையடுத்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாணவர்களின் பெற்றோர்களை ஆஜராக உத்தரவிட்டார். இந்நிலையில், வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது மாணவர்களின் பெற்றோர்கள் ஆஜராகி இருந்தனர்.

உயர்நீதிமன்றம்

அப்போது ஆஜரான காவல்துறை வழக்கறிஞர் அருள்செல்வன், “கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஒரு செமஸ்டர்க்கு பத்துக்கும் குறைவான நாட்களே கல்லூரிக்கு சென்றுள்ளனர்” எனக் கூறினார். மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாணவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, “சிறையில் உள்ள மாணவர்கள் குறித்து மட்டும் கவலைப்படும் நீங்கள் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தை பற்றி ஏன் கவலைப்படவில்லை?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், “வருகைப் பதிவேட்டை வைத்து பார்க்கும் போது அவர்கள் பொறுப்பான மாணவர்களாக தெரியவில்லை. இறந்த மாணவன் பில்லியனர் வீட்டு பையன் கிடையாது, சாதரண கூலி வேலை செய்பவர் மகன். அதை உணரவே பெற்றோர்களை ஆஜராக உத்தரவிட்டேன்” என்றார் கறாராக.

தொடர்ந்து, “கடந்த ஆண்டுகளில் வெறும் அடிதடி சம்பவமாக இருந்தது தற்போது கொலை சம்பவமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்களை தடுக்க நிச்சயம் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

மோதல்

இதனையடுத்து, சென்னையில் கடந்த பத்தாாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவற்றின் நிலை, சமரசமானவை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.