தமிழ்நாடு

நீரிழிவு நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா ? : நீதிபதிகள்

நீரிழிவு நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா ? : நீதிபதிகள்

webteam

நீரிழிவு நோயாளிகள் அதிகரித்துவரும் சூழலில் அவர்களை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதுரையை சேர்ந்த கேசவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.அதில். "இந்தியாவில் சக்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் சிறுவர்கள் சக்கரை நோயால் பாதிக்கபட்டுள்ளனர். சிறுவர்கள் சக்கரை நோயால் பாதிக்கபடும் போது சரியான நேரத்தில் உணவு விகிதத்தை கடைபிடித்து, இன்சுலின் மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும். சக்கரை நோய் பாதிக்கபட்ட மாணவர்கள் சக்கரை நோய் பரிசோதனை கருவி, பரிசோதனை ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை பொதுதேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கின்றனர். இதனால் சக்கரை அளவு குறையும் போதோ அல்லது கூடும் போதோ மாணவர்களின் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போகும். 

மேலும் டிஎன்பிஎஸ்பி., நீட், JEEE உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கும் சக்கரை நோய் மருத்துவ உபகரணங்கள் எடுத்து செல்ல அனுமதிப்பதில்லை. இவ்வாறு மறுப்பது இந்திய உரிமையியல் சட்டம் 14 மற்றும் 21 க்கு எதிரானது. சிபிஎஸ்இ 2017 ல் நிபந்தனைகளுடன் பொதுதேர்வு அறைக்கு சக்கரை நோய்க்கு உதவும் பொருட்களை எடுத்து செல்லலாம், தேர்வு சமயத்தில் சிறுநீர் கழிக்க செல்லலாம் என சுற்றறிக்கை அனுப்பியது. இந்தியாவில் விரைவில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. எனவே பொதுதேர்வு, போட்டி தேர்வு அறைகளுக்கு சக்கரை நோய் பாதிப்பு மாணவர்கள் இன்சுலின் பென், சோதனை கருவி உள்ளிட்ட சக்கரை நோய் பரிசோதனை கருவிகளை எடுத்து செல்ல அனுமதித்து இடைகால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் சக்கரை நோய் பாதிப்பால் பாதிக்கபட்ட மாணவர்கள் தேர்வு அறைக்கு பரிசோதனை ஸ்டிரிப், மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், இன்சுலின் போன்றவற்றை எடுத்து செல்ல சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ நிபுணர்கள் நேரில் ஆஜராகி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சில அத்தியாவசிய தேவைகள் உள்ளது. அவை தாமதமானால் அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.


இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் மொத்தம் எத்தனை நீரிழிவு நோயாளிகள் உள்ளனர்? இந்தியாவில் மொத்தம் எத்தனை நீரழிவு நோயாளிகள் உள்ளனர்?அவர்களுக்கான போதிய மருத்துவ வசதிகள் தாலுகா மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ளனவா? சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவர்கள் உள்ளனரா? தேர்வுகளின்போது சர்க்கரை நோயாளிகள் குளுக்கோமீட்டர் பொருத்தி செல்ல அனுமதிக்கலாமா?வருங்காலங்களில் போட்டித் தேர்வு நுழைவு தேர்வுகளை எழுதி செல்லும் நீரிழிவு நோயாளிகள் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கலாமா? நீரிழிவு நோயாளிகள் அதிகரித்துவரும் சூழலில் இவர்களை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்க திட்டம் ஏதும் உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர்.மேலும் இதற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.