தமிழ்நாடு

“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை எங்கே?” - நீதிபதிகள் கேள்வி

webteam

தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதால் இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சிவகளை பரம்பு பகுதியில் நமது பழமையை உணர்த்தும் வகையிலான சான்றுகள் நிறைய உள்ளன. ஆகவே அங்கு அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். அதற்கு நீதிபதிகள் இதுபோல, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதே அதன் முடிவு என்னானது?. ஏன் இதுவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து, தமிழர் நாகரீகம்,பண்பாட்டை அறிவது முக்கியம். ஆனால் அதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது இல்லை. கீழடி அகழ்வாய்விலும் அதிகாரி இடம் மாற்றம் எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.இது போன்ற நிகழ்வுகளால்தான் மத்திய தொல்லியல்துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். விரைவாக குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டும். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சிவகளை பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய,மாநில தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர்புடைய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நேரில் ஆஜராக நேரிடும் எனக் கூறி வழக்கை பிப்ரவரி 19 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.