தமிழ்நாடு

தமிழகம் இந்தியாவில்தானே இருக்கிறது ? நீதிபதிகள் வேதனை

தமிழகம் இந்தியாவில்தானே இருக்கிறது ? நீதிபதிகள் வேதனை

webteam

ஆதிச்சநல்லூர் அகழாய்வு விஷயத்தில் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிடக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் தூத்துக்குடி சிவகளைபரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும்  தனி மனுவையும் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தை மத்திய தொல்லியல்துறை புறக்கணிக்கிறது. குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு 1000 கோடியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அகழாய்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள்,ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை. தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியதுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்க பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும் தொல்லியல் அலுவலர் சத்தியமூர்த்தி தயாராக இருந்தார். இருப்பினும் அவருக்கு மத்திய அரசு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களின் வயதை கண்டறியும் சோதனைக்காக புளோரிடாவுக்கு அனுப்பவில்லை. இவற்றை பார்க்கும் போது தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லாம் இருப்பது தெரிகிறது. தமிழகம் இந்தியாவில் தானே  இருக்கிறது? தமிழகத்திற்கு பெருமை என்றால்,அது இந்தியாவையும் சாரும்தானே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என்றனர்.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில்,அகழாய்வு மேற்கொள்வதில் மத்திய அரசு பாகுபாடு பார்க்கவில்லை.தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.