தமிழ்நாடு

மழை பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டதாக உயர் நீதிமன்றம், திமுக பாராட்டு!

மழை பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டதாக உயர் நீதிமன்றம், திமுக பாராட்டு!

Sinekadhara

இந்த ஆண்டு கூடுதல் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டபோதும், அதிமுக அரசு அதை சிறப்பாக கையாண்டதாக நீதிபதி மற்றும் திமுக சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலதா முதல்வராக இருந்தபோது தற்போதைய திமுக தலைவர் முக ஸ்டாலின்மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. இன்று அந்த வழக்குகள் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் நான்கு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், வலுவான குற்றச்சாட்டோ அல்லது உரிய ஆதாரமோ இல்லாமல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யும் கலாச்சாரம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, கடந்தமுறை பெருவெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பாடமாக எடுத்துக்கொண்டதால்தான், இந்த ஆண்டு பெய்துள்ள கூடுதல் மழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிய நிலையிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்தார். அதேபோல விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அனுபவமாக எடுத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.

எந்த அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களாக இருந்தாலும் தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறித்தியுள்ளார். அதேபோல தங்கள் ஆளுமையை தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த ஆண்டு மழையின்போது நீர்நிலைகள் முழுமையாக நிறைந்தபோதும் ஏரிகள் திறப்பில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனும் நீதிமன்றத்தில் பாராட்டு தெரிவித்தார். இதையடுத்து, ஸ்டாலின் தொடர்ந்த மற்ற வழக்குகளின் விசாரணையை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.