தமிழ்நாடு

ஜிபிஎஸ் கருவி குறித்த போக்குவரத்துத் துறை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

ஜிபிஎஸ் கருவி குறித்த போக்குவரத்துத் துறை உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

Sinekadhara

பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டுமே பொருத்தவேண்டும் என்று போக்குவரத்துத் துறை முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் என்ற அமைப்பு வழக்குத் தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கின் மனுவில், 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களில், அதாவது பொது போக்குவரத்துத் துறையில் உள்ள வாகனங்களில் குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை மட்டும்தான் பொருத்தவேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 2018இல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், 140க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஜிபிஎஸ் கருவிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் கருவியை மட்டும்தான் பொருத்தவேண்டும் என்பது சட்ட விரோதமானது; மேலும் அதில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும், எனவே அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மற்ற நிறுவனங்களுக்கும் இந்த 8 நிறுவனங்களுக்கும் என்ன மாதிரியான வித்தியாசங்கள் உள்ளது மற்றும் என்ன மாதிரியான தொழில்நுட்ப தகுதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் அரசு தேர்வு செய்தது என்பது குறித்த விளக்கங்களை அரசு தரப்பில் முன்வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணையை 2021ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், 8 நிறுவனங்களின் கருவிகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்ற ஆணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.