மும்பையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
சென்னை போரூர் மதனந்தபுரத்தைச் சேர்ந்த ஆறு வயது குழந்தை ஹாசினியை கொன்ற கொலைக் குற்றவாளியான தஷ்வந்த் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் கிடைத்த தவறான சகவாசங்கள் தஷ்வந்துக்கு மேலும் பல தீய செயல்களை பழக்கிவிட்டது. ஜாமீனில் வெளிவந்தும் போதைப்பழக்கம், சூதாட்டம் என தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட தஷ்வந்த், தனது செலவுகளுக்கு பணம் தர மறுத்த தாய் சரளாவை கடந்த 2-ஆம்
தேதி அடித்துக் கொலை செய்தார்.
வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பிய தஷ்வந்த் கோயம்பேடு சென்று அங்கிருந்து பெங்களூருவுக்கும், அதனைத்தொடர்ந்து மும்பைக்கும் சென்று தலைமறைவானார். 5 தனிப்படைகள் அமைத்து அவரை தேடிவந்த போலீசார், பாலியல் தரகர் ராஜ்குமார் தாமஸ் என்பவர் மூலம் மும்பையில் பாலியல் தொழிலாளி ஒருவரிடம் தஞ்சம் அடைந்திருந்த தஷ்வந்த் பற்றி தகவல் அறிந்தனர்.
இதையடுத்து மும்பை சென்ற தனிப்படை போலீசார், செப்பூர் என்ற இடத்தில் பதுங்கியிருந்த தஷ்வந்தை சூதாட வந்தபோது கடந்த 6-ஆம்தேதி கைது செய்தனர். தார்டியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சென்னை அழைத்துச் செல்ல மும்பை போலீசார் கூறியதையடுத்து நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு மும்பையில் இருந்து சென்னை கொண்டுவருவதற்கான டிரான்சிட் வாரண்ட் வழங்கிய நிலையில், வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில்
தஷ்வந்த்தை விமான நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டு முடித்ததும் வயிறு வலிப்பதாக கூறியதை நம்பி ஒரு பக்க கைவிலங்கை போலீசார் கழற்றிய நிலையில் அங்கிருந்து தஷ்வந்த் தப்பியோடினார். இதனைத்தொடர்ந்து மும்பை பிலாஸ்பூர் காவல்நிலையத்தில் தமிழக போலீசார் புகார் அளித்தனர். மும்பை முழுவதும் தேடிய நிலையில், அந்தேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், தாடியை எடுத்துவிட்டு புது தோற்றத்திற்கு மாறிய நிலையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை போலீசார்
அதிரடியாக கைது செய்தனர். தப்பியோடிய 24 மணி நேரத்திற்குள் தஷ்வந்த் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 224-ன் கீழ் மும்பை விலேபார்லே காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதன்படி தஷ்வந்தை கைது செய்து பின் நீதிமன்றத்தில் டிரான்சிட் வாரண்ட் பெற்றுதான் சென்னைக்கு கொண்டு வரமுடியும். எனவே அதற்கான பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.