admk vs bjp
admk vs bjp file image
தமிழ்நாடு

இபிஎஸ் சொல்வதுபோல் வாக்குசதவீதம் அதிமுகவிற்கு அதிகரித்துள்ளதா? தராசு ஷ்யாம் சொல்வதென்ன?

PT WEB

ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின், அதிமுக குறித்தும் அதிமுக - பாஜக கூட்டணி குறித்தும் அதிகம் பேசப்பட்டது. “அதிமுக பலவீனமடைந்துவிட்டது என்றும் அதிமுக-பாஜக கூட்டணி இருந்திருந்தால் சில தொகுதிகளில் வென்றிருக்கும். ஓபிஎஸ் டிடிவி இருக்கும் ஒருங்கிணைந்த அதிமுக தேவை” என்றெல்லாம் சொல்லப்பட்டது. இப்படி அனைத்து கேள்விகளுக்கும் எடப்பாடி பழனிசாமி தனது ஒற்றை செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.

இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் பிரசாரம் மேற்கொண்டார்கள், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் பிரசாரம் மேற்கொண்டார்கள். இதற்கு மத்தியில்தான் அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

பாஜக ஏதோ வளர்ந்துவிட்டதைப் போல ஊடகங்களில் செய்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டு பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 18.80% வாக்குகள் பெற்றார்கள். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 18.28% வாக்குகள். குறைவாகத்தான் வாக்குகளைப் பெற்றுள்ளார்கள். எனவே பாஜக வளரவில்லை. திமுக, கட்சியாகவும் கூட்டணியாகவும் 2019 ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளைவிட தற்போது பெற்ற வாக்கு சதவீதம் குறைவு” என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம், “எடப்பாடி பழனிசாமி கூறியதில் சிலவை சரி. தமிழ்நாட்டில் இருதுருவ அரசியல்தான். பாஜக வளர்ந்திருப்பதாக கூறினாலும் அது சரியல்ல என்பது வரை சரிதான். ஆனால் அதிமுகவின் வாக்குசதவீதம் கூடியுள்ளது என்று சொல்வது தவறு.

காரணம், ஒரு கட்சி போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை, பெற்ற வாக்கு, பதிவான வாக்குகளில் எத்தனை சதவீதம், எத்தனை தொகுதிகளில் டெபாசிட் பறிபோனது, வெற்றிக்கும் தோல்விக்குமான வித்தியாசம் எவ்வளவு இவற்றையெல்லாம் வைத்துத்தான் கணக்கிட முடியும். திமுக கிட்டத்தட்ட 1 கோடியே 17 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் 22 இடங்களில்தான் போட்டியிட்டது. அதிமுக 89 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், கிட்டத்தட்ட 34 தொகுதிகளில் நின்றுள்ளது. எனவே திமுகவையும் அதிமுகவையும் இப்படி ஒப்பிட முடியாது.

தராசு ஷ்யாம்

பாஜகவை பொருத்தவரை 2014 தேர்தலை எடுத்துக்கொண்டால், கூட்டணியாக இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். 18% வாக்குகளை வாங்கினர். பாஜகவை மட்டும் எடுத்துக் கொண்டால் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 6% வாக்குகளைப் பெற்றனர். இம்முறை பாஜக போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம். அதைவைத்து கணக்கு பார்த்தால் பாஜக வளரவில்லை. எந்த தொகுதியிலும் வெற்றியும் பெறவில்லை. ஆனால் அதிமுக ஒற்றுமைபட வேண்டிய அவசியம் இல்லை என சொல்லுவதை தவறு என்றே நினைக்கின்றேன்” என தெரிவித்தார். அவர் கூறியதை விரிவாக அறிய, கீழ் இணைக்கப்படும் வீடியோவை காண்க...