செய்தியாளர்: ராஜ்குமார்
சென்னை மாநகராட்சியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுவது கட்டாயமாகும்.
நடுத்தர மக்கள் பயன்பெறும் நோக்கில், சுய சான்றிதழ் அடிப்படையில் இணையவழி மூலம் விண்ணப்பித்த உடனே வெளிப்படைத் தன்மையாக கூர்ந்தாய்வு கட்டணம், உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு கட்டணம் இன்றி 2500 சதுரடி பரப்பளவு வரை உள்ள மனையில் 3500 சதுரடிக்கு உள்ளாக ஒப்புதல் வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன் படி ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயசான்றின் அடிப்படையில் வழங்கப்பட நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கும் ஏற்கனவே உள்ள கட்டணத்திற்கும் (சதுர அடிக்கு 99.70 ரூ) வித்தியாசம் இல்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மற்ற சில மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் சுயசான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கும் கட்டணம் அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு அரசு குறைத்துள்ளது.
எனவே சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, நடுத்தர மக்கள் சுயசான்றின் அடிப்படையில் எளிமையாக கட்டட அனுமதி பெறும் பலன்களை தடுக்கும் நோக்கில் தவறான கருத்துகளை பரப்புவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.