சீமான், விஜயகாந்த், விஜய், பவன் கல்யாண் புதிய தலைமுறை
தமிழ்நாடு

இனி கூட்டணிதான்... விஜயகாந்த், பவன் கல்யாண் பாணி - பாதையை மாற்றுகிறாரா சீமான்?

இரா.செந்தில் கரிகாலன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எட்டு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக பரிணமித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஆனால், கடந்த நான்கு தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வந்த அந்தக் கட்சி இதுவரை ஒருமுறைகூட வெற்றி பெற்றதில்லை. அதனால், இனிவரும் காலங்களில் அண்ணனின் திட்டம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

2009-ல் இயக்கமாக தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2010-ல் கட்சியாக மாற்றப்பட்டது. முதல்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டு ஒரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. தொடர்ந்து 2019 தேர்தலில் மீண்டும் தனித்துக் களமிறங்கி, 3.67 சதவிகித வாக்குகளைப் பெற்றது அந்தக் கட்சி. ஐம்பது சதவிகிதம் பெண் வேட்பாளரார்களை களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் தனித்துக் களமிறங்கி, 6.8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கடைசியாக, தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, எட்டு சதவிகிதத்துக்கும் அதிகம் பெற்றதோடு, அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாகவும் மாறியிருக்கிறது.

சீமான்

இதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், இரண்டு சட்டமன்றத் தேர்தல், இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வாக்கு சதவிகிதம் படிப்படியாக உயர்ந்தாலும் வெற்றிக்கனியை இதுவரை நாம் தமிழர் கட்சியால் பறிக்கமுடியவில்லை.

அதனால், இனிவரும் காலங்களில் சீமான் கூட்டணி முடிவைக்கூட எடுக்க வாய்ப்பிருக்கிறது, விஜய்யும் கட்சி ஆரம்பித்திருப்பதால் அந்த வாய்ப்பும் இன்னும் பிரகாசமாகியிருக்கிறது என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில்.

vijay

அதற்கு முக்கியமான இரண்டு காரணங்களையும் முன்வைக்கிறார்கள். ஒன்று தமிழ்நாட்டில் நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, இரண்டு தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தன் வாங்கு வங்கியை நிரூபித்து எதிர்க்கட்சித் தலைவர் வரைக்கும் உயர்ந்தார். ஒரு சில காரணங்களால், அவரால் ஜொலிக்கமுடியா விட்டாலும், கூட்டணி அமைத்த பின்னரே அதிகமான எம்.எல்.ஏக்களைப் பெறமுடிந்தது.

விஜயகாந்த் மட்டுமல்ல, சீமானின் முடிவுகள் மாறுவதற்கு தற்போது ஆந்திராவின் எதிர்க்கட்சித் தலைவராக மாறியிருக்கும் ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணையும் ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். 2014-ல் தனியாக கட்சி ஆரம்பித்த பவன் கல்யாண், 2019 தேர்தலில் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட ஆந்திராவில் பெரியளவில் வாக்குவங்கி இல்லாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டார்.

Pawan kalyan

அப்போது அவரால் ஒரு எம்.எல்.ஏவையும், 5.5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால், நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில், தெலுங்குதேசம், பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போடியிட்டு 21 எம்.எல்.ஏக்கள் மற்றும் இரண்டு எம்.பிக்களைப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற்று நூறு சதவிகித வெற்றிக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார். அதோடு, எதிர்க் கட்சியாகத் தேவையான 18 இடங்களை ஜெகன்மோகன் ரெட்டி பிடிக்காததால், 21 இடங்களைப் பெற்ற பவன் கல்யாணுக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

“பவன் கல்யாண் என்னுடைய பேச்சை விரும்பிக் கேட்பார். என்னைப் பின்பற்றி என்னைப் போலவே கையை உயர்த்தி பேசி வருகிறார்” என சீமான் பெருமையாக பல இடங்களில் குறிப்பிடுவார். இந்தநிலையில், தற்போது பவன் கல்யாண் வழியை பின்பற்றி கூட்டணி பேருந்தில் ஏறி, சீட்டைப் பிடிக்க சீமானும் முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளரான இடும்பாவனம் கார்த்தியிடம் பேசும்போது... “தமிழ் தேசியம் எனும் தத்துவத்தை ஏற்று, எங்களுடைய கொள்கையான அறம் சார்ந்த தமிழர் ஆட்சி என்பதை ஏற்று, எங்கள் தலைவரை ஏற்று கூட்டணிக்கு வருபவர்கள் குறித்து பரீசிலனை செய்வோம், ஆலோசிப்போம்’’ என்றார்.