நடிகர் விஜய் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தொடரும் மக்கள்நலன் சார்ந்த பணிகள்.. அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளாரா நடிகர் விஜய்?

கடந்த சில மாதங்களாக மக்கள்நலன் சார்ந்த பணிகளை நடிகர் விஜய் தீவிரப்படுத்தியிருப்பது அரசியலுக்கு வருவதற்கான பணிகளில் ஒன்றா? விரிவாக பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்குமார்

கடந்த சில மாதங்களாக மக்கள்நலன் சார்ந்த பணிகளை நடிகர் விஜய் தீவிரப்படுத்தியிருப்பது அரசியலுக்கு வருவதற்கான பணிகளில் ஒன்றா? விரிவாக பார்க்கலாம்...

திரைத்துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர்களில் விஜய்யும் ஒருவர். தற்போதைய சூழலில் அதிகளவு ரசிகர்கள் கொண்டுள்ள விஜய், அவரது மக்கள் மன்றங்கள் மூலம் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அடுத்த சூப்பர்ஸ்டார் என அவரை கூறிய போதும், அந்த பட்டம் தேவையில்லை என்ற அவர், மக்கள் மன்றம் மூலம் நேரடியாக மக்களை சந்திக்க தொடங்கியுள்ளார்.

முதலாவதாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை தன் கைகளால் வழங்கி ஊக்குவித்தார். தற்போது நெல்லைக்கு சென்று மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாகவே அரசியல் கட்சியில் இருப்பது போன்று மக்கள் இயக்கத்திலும் புதிய புதிய பிரிவுகளை உருவாக்கினார் விஜய். அத்துடன் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சில வெற்றி கனிகளையும் பறித்தனர். இதனையடுத்து விஜய் எடுத்து வரும் ஒவ்வொரு முன்னெடுப்பும், ஒரு உரையும் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறி வருகிறது என்பதை ஒப்பு கொண்டே ஆக வேண்டும்.

இப்படியான சூழலில் , "விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் விஜய் அரசியல் களத்தில் வருவதாக இன்னும் நேரடியாக அறிவிக்க விட்டாலும், அரசியல் களத்துக்காகத் தான் செய்யப்படுகிறது.அரசியல் வருவதற்கு ஆயத்த பணிகளில் ஒன்றாகதான் இதனை பார்க்க வேண்டும்"என்கிறார் பத்திரிக்கையாளர் கோடீஸ்வரன்.

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு அரசியல் ஆளுமைகள் மறைந்த பிறகு அரசியல்களம் புதுப்புது மாற்றங்களை கண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விஜய் வருகையும் இருக்கக் கூடும் என்றே பார்க்கலாம். ஆனால், நீட், காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் விஜய்யின் குரல் எப்படி ஒலிக்கிறது என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வு பார்க்கப்படும்.