happy street file image
தமிழ்நாடு

பெரம்பலூரை அதிரவைத்த Happy Street.. 3 மணி நேரத்துக்கு மேல் உற்சாகமாக ஆடிய இளைஞர்கள்..!

பெரம்பலூரில் நடந்த Happy Street நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உற்சாகமாக ஆடி மகிழ்ந்த நிலையில், அடுத்தமுறை போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வேறு இடத்திற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.

யுவபுருஷ்

காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை போன்ற மாநகரங்களில் ஞாயிற்றுகிழமைகளில் Happy Street நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் பெருகும் வரவேற்பால், வளர்ந்துவரும் நகரங்களின் வரிசையிலுள்ள பெரம்பலூரில் Happy Street நேற்று நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, இரவு 8 மணி வரை நீண்டது. இதில் பரதம், குச்சுபுடி, உள்ளிட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சி மற்றும், சிலம்பம் போன்ற தற்காப்பு கலை விளையாட்டுகள் நடைபெற்றன. சிறுவர்கள், இளைஞர்கள் இளம்பெண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 6 முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும் பங்கேற்று உற்சாகமாக நடனமாடினர்.

இதில் மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். சிலர் சாலை சென்டர் மீடியேட்டரில் ஆபத்தான முறையில் அமர்ந்துகொண்டும் பாடலுக்கு வைப் செய்தனர். காவல்துறையினர் எச்சரித்தும் நடனமாடும்போது குழுவாக கூடியிருந்த சில பார்வையாளர்கள் ஒருவரை ஒருவர் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடினர்.

நிகழ்ச்சி அமைதியான முறையில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றாலும் சாலையின் மறுபுறம் சென்ற வாகனங்கள் கடக்கமுடியாமல் கடந்து சென்றது. அங்கு வந்திருந்தவர்கள் இதுகுறித்து பேசியபோது, “பிறமாவட்டங்களை போன்று பெரம்பலூர் நகரிலும் Happy Street நடத்தப்படுவது மகிழ்ச்சியே.

ஆனால் சாலை போக்குவரத்துக்கு நெரிசலாக மாறிவிட்டது. அடுத்தமுறை சிரமத்திற்கு வழிவகுக்கும் விதமாக இல்லாமல், வேறு இடங்களில் நிகழ்ச்சியை நடத்தலாம்” என்று கூறினர்.